Posts

Showing posts from October, 2024

புதுப்பாதை

இறுக்கிப் பிடித்தாலும் விலகும் முந்தானை தான் பாசமும் பணமும் வெற்றிலை எச்சிலாய் வீதியெங்கும்  சிதறிக் கிடக்கும்  அரிவாள் துண்டுகள்  காதல் வாரிசுகள் விவாகரத்து வாசலில் விழித்துக் கிடக்கின்றன இன்றைய பசுக்களுக்கும் மனிதனைப் பின்பற்ற ஆசை மாமிசக்கடை தேடுகின்றன பள்ளிகள் பள்ளியறை ஆனபின் பாடங்கள் பறவைகளாயின மொத்தத்தில் மாறிக்கொண்டே வருகிறது புதுமைப் போர்வைக்குள் மனித பாதை....

கிழக்கு வானம்

பூ பறிக்க கை வைத்தேன் முந்திக்கொண்டது முட்கள் உதிரத்தின் துளிகளில் உன் பிம்பம் சிரிக்கிறது நான் வேர்களில் நீருற்றுகிறேன் நீயோ அமில மழையில் நனைந்து கொண்டிருக்கிறாய் நிஜம் வேறு நிழல் வேறு நீ அறிவாயா? வெளிச்சம் போனால் நிழலும் நீங்கி விடும் உன் விழி  மீட்டும் வீணையின் விரல்கள் நான்... வெள்ளை உள்ளம் புதைந்த புது வனம் நானானேன் ரீங்காரமின்றி நிசப்தம் நிலவுது வேர்விட்ட ஆலமரம் கிளைகளை துண்டிக்க துடிப்பதேனோ கிளியே நீ கூறு இங்கே விழுதின் பழுதென்ன விடியல் தேடும் விளக்கானேன் விடியுமா? இல்லை உன் விழியில் மடியுமா? உன் வரவை நோக்கும் வானம்... முனைவர் இரா.திருப்பதி உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை அரசு கலைக் கல்லூரி சேலம் 7 

பொய்தேசம்

 இருண்ட தேசமிது பகலில் தொலைத்துவிட்டு  இரவில் தேடும்  முகமூடி மனிதர்கள்  தாயோ பிள்ளையின் வார்த்தையறியா கிள்ளை தந்தையோ துணையின் காதல் ஓவியம் காணா வெற்றேடு சகோதரனோ சுக சொத்தில் புதைந்த சேற்றுமடு தேகபுத்திரியோ கற்பின் விலைதேடும் அழுகிய பிறை பாலுக்கு அழும் பிள்ளையாய் தாகத்தோடு காத்திருக்கும் பூமி சூரியனை புதைத்துவிட்டு  விடியல் தேடும் விதை யாருக்கும்  சொல்லாமல்  விதவையானது வானம்

நிழல்நிலா

  நிறைந்த குளம் நீந்தத் தெரியாத மீன்கள் கோடையிலும் உலரவில்லை பூவாய் புன்னகைக்கும் செடிகள்  பசும் புல்வெளி  நடக்க கற்றுக் கொள்ளாத பாதசாரிகள்  வியர்வையில் சிரிக்கும்  மின்னல் நாற்றுகள்  என் தேசமெங்கும் தேன்கூடு  கசக்கும் வாழ்க்கை  ஆனாலும்  வாழ்க்கை மீதமிருக்கிறது தரையிலும் தப்பிக்கும் மீன் அவள் வரைந்த கோலம்  மேகக் கட்டிலில்  அரைகுறை நிலா எழுத தவிர்த்து விடுகிறது  இதய  தூரிகை  புனிதர்களின் மனசு மட்டுமல்ல  கூந்தலுக்கும் தொற்றிக் கொண்டது வெண்மை ஆனாலும் காதல் வண்ணத்தில்  அழகானது பூமுகம் மலர்ந்த பூக்களோ  அவள் உதிர்க்கும்  வார்த்தை முத்துக்கள்  வாழ்க்கை மிச்சமிருக்கிறது  அவள் நிழலில்  அந்திமப்பயணியாய்...